Saturday, 4 March 2017

புவி தோன்றிய வரலாறு -3

நாம் வாழும் இப்புவி, சூரியனிலிருந்து பிரிந்து, சூரியனைச் சுற்றிவர ஆரம்பித்து, காலப்போக்கில் குளிர ஆரம்பித்தது. உண்மையில் அப்போதைய பூமி, எரிமலைக் குழம்பைக் கடலாகக் கொண்டிருந்தது. (அப்போது சுனாமி வந்தால், அதன் விளைவை சற்று எண்ணிப்பாருங்கள்...!)
Image may contain: night
அப்போதைய பூமி, தற்போது இருப்பதுபோல் வளிமண்டலக் கவசம் ஏதுமின்றி இருந்ததால், விண்கல் (Asteroid), எரிகல் (Shooting Star), வால்நட்சத்திரம் (Comet) போன்றவைகள், இந்தியாவின் மீது படையெடுத்த அன்னியர்களைப் போல் சரமாரியாக மோதல் மழை பொழிந்தன.
அதன் விளைவாக இன்றைய பூமியின் புறப்பரப்பில் மேடு பள்ளங்கள் தோன்றின. ( தற்போதைய கடல் பகுதிகள், அவற்றை நிரப்பி, முழுமையான உருண்டை வடிவக் காட்சியை ஏற்படுத்தின. இன்று கடலடியிலுள்ள பெரும்பாலான பள்ளங்களும், அகழிகளும் அவ்வாறு உருவானவைகளே! ) புவியின் புறப்பரப்பில் நீர் அதிகமாகக் காட்சியளித்தாலும், உண்மையில் நிலப்பரப்பே உலகில் அதிகம்.
நம்மிடையே காலம்காலமாக நிலவிவரும், "பூமி குளிர்ந்து, பின் ஏற்பட்ட நீராவி, மழையாய்ப் பொழிந்து, பின்புதான் நமது புவியில் நீர் தோன்றியது" என்ற கருத்து தவறானது. நீராவி உருவாகவும் நீர் வேண்டும். அந்த அடிப்படை நீர், நமக்கு வால்நட்சத்திரங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றதே..!
அப்படி, நமக்கு அத்தியாவசியமான நீரை, நமக்கு வால்நட்சத்திரம் மூலம் Courier செய்தது யார்?
அவ்வாறு அனுப்பப்பட்ட நீர் எப்படி இவ்வளவு பத்திரமாக மற்ற கோள்களைப் போலல்லாமல் நமது பூமியில் மட்டும் தேக்கி, பாதுகாக்கப்பட்டது?
முதலாவது கேள்விக்கான பதில் :
அப்போது மோதிய வால்நட்சத்திரங்கள் மட்டுமல்ல, தற்போது நாம் வான்வெளியில் கண்டு ரசிக்கும் வால்நட்சத்திரங்கள் அனைத்தும், நமது சூரியக்குடும்பத்தின் எல்லை எனக் கருதப்படும், "குயிப்பர் பெல்ட்" (Kuiper Belt) எனும் ஒரு வெளிவட்டப்பதையில் இருந்தே வருகின்றன. அப்பாதையைச் சுற்றிலும் உள்ள மேகங்கள் போன்ற பனித்திரள்கள் "ஊர்ட் மேகங்கள்" (Oort Cloud) என்றழைக்கப்படுகின்றன. இங்குதான் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன.
No automatic alt text available.
"உண்மையில் அந்த நீர் நமக்காக அனுப்பி வைக்கப்பட்டனவா?" என்றால், 'தெரியாது' என்பதே எனது பதிலாக இருக்கும். காரணம், அக்கேள்விக்கும் பதில் கூறுவதற்கான தகுந்த சாத்தியக்கூறுகள் இருப்பதால்தான்..!
இரண்டாவது கேள்விக்கான பதில் :
"புவிஈர்ப்புவிசை". இது நம்மைச் சுற்றியுள்ள பிற கோள்களைக் காட்டிலும் நமது புவியில், நீரைத் தக்கவைக்கும் அளவிற்கு இருக்கிறது. பிற கோள்கள், சூரியனிலிருந்து சரியான தொலைவில் (அதாவது, நீரை நீராக வைத்திருக்கும் தொலைவில் இல்லாததால், அவ்வாறு பெறப்பட்ட நீரை, பனிக்கட்டியாகவோ, அல்லது நிரந்தர நீராவியாகவோ வைத்திருக்கின்றன.
( "இன்னைக்கு இவன் 'சயின்ஸ் புக்'க கையில குடுத்துட்டான்" அப்டினு நீங்க புலம்புறது எனக்கு கேட்குது...! ஆனால், அடுத்த கட்டத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல இவ்வறிமுகம் அவசியமாகிறது.)
உண்மையில் நமது பூமி மட்டும்தான் நீரைத்தேக்கும் சரியான தொலைவில் அமைந்துள்ளதா?
"இல்லை"
'அப்படியானால், நமது சக போட்டியாளன் யார்...?'
அவன், நமக்கு மிக அருகிலேயே அமைந்துள்ள, பூமியின் இரட்டைச் சகோதரன் என்றழைக்கப்படும் "செவ்வாய்". இன்றும்கூட அங்கு நீர்நிலைகள் இருந்ததற்கும், ஏரிகள் உருவாகியிருந்ததற்க்குமான ஆதாரங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.
"எங்கே ஓடி மறைந்தன அவ்வளங்கள்...?!" என்கிற நமது நியாயமான கேள்விக்கு, அறிவியலின் தற்போதைய பதில், "நிச்சயமாகத் தெரியாது". ஆனால், அதைப்பற்றிய யூகங்கள் அதிகம் உலவுகின்றன.
சரி. இப்போது நாம் பூமிக்கு வருவோம். உலகின் முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது, பூமி குளிர்ந்த பின்பே என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில் பூமி தீக்கோளமாய் தகிக்கும்போதே அதில் ஊர் உயிரினம் வாழ்ந்துவந்தது. அதன் பெயர் "ஆர்ச்சியா" (Archaea).
இது ஏறத்தாழ முப்பது கோடி ஆண்டுகள் இப்பூமியில் தனது சந்ததியைப் பெருக்கியது; வெறும் இரும்பு மற்றும் நச்சுப்பொருட்களை உண்டு, உலகை பலவகை உயிரினங்கள் தோன்ற ஏற்ற இடமாக மாற்றியது. இதன் விசித்திர தன்மை என்னவென்றால், மனிதனை சாம்பலாக்கும் அளவிற்கு வெப்பம் இருந்தால் மட்டுமே, இவை உயிர் வாழும். இன்றும் கூட, எரிமலைக் குழம்புகளில் இவை வாசம் செய்கின்றன.
[ பைபிளிலும், குரானிலும் அவர்களது மத நம்பிக்கையின்படி, மனிதனைப் படைக்கும் முன்னரே, கடவுள் "சாத்தானை"ப் படைத்தார். நரகத்தின் ஆட்சியாளனாக வர்ணிக்கப்படும் "சாத்தான்" அல்லது "சைத்தான்", நெருப்பின் சூழ்நிலையில் வாழ்வதுபோல "Tom and Jerry" உட்பட அனைத்து வித ஊடகங்களும் காட்சிப்படுத்துகின்றன; கையில் இரும்பாலான சூலத்தோடு. ஆனால், பெரும்பாலும் இவ்வுருவகங்கள், நரகத்தில் தண்டனை வழங்க நியமிக்கப்பட்ட, ஒரு எம-கிங்கரர்களைப் போன்றும் காட்சிப்படுத்தப் படுகின்றன.
குரானில், 'ஜின்'கள் நெருப்பினால் படைக்கப்பட்டவை என்ற ஒரு நம்பிக்கை உண்டு. (ஆனால், இந்த ஜின்கள் பூதாகரமானவை, என்றும் நம்பப்படுகிறது.)
மனிதனுக்கு முன்னால் படைக்கப்பட்டது,
நெருப்பில் வாழும் சூழ்நிலை,
கையில் இரும்பு, ( அதுவும் 'குத்தி' உண்ணக்கூடிய "Fork"-ஐ நினைவுபடுத்துவது போல )
இன்றும் மனிதர்கள் வாழும் சூழ்நிலையில், (அதாவது இன்னும் பூமியில்) வாழ்கின்றது! அது
போன்ற விஷயங்கள், ஆர்ச்சியாவையும், சாத்தானையும் ஏதோ ஒருவகையில் குறிப்பது போலவே தோன்றினாலும், 'நிச்சயமாக சாத்தானின் உருவகம் இந்நுண்ணுயிரியைத்தான் குறிக்கிறது' என்று நான் சொல்லவில்லை. ]
முப்பது கோடி ஆண்டுகளில் பூமி குளிர்ந்ததால், அச்சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆர்ச்சியா, சயனோபாக்டீரியாவாக (Cyano Bacteria) உருவெடுத்தது. உலகின் முதல் பரிணாம வளர்ச்சி இங்கிருந்து துவங்குகிறது. இவைதான், கரியமில வாயுவை (Carbon-di Oxide [கார்பன்-டை ஆக்சைடு] ) கிரகித்து, பிராணவாயுவை (ஆக்சிஜன் [Oxygen]) உற்பத்தி செய்த பிரம்மா..! (ஐயா சயனோபாக்டீரியா..உண்மையிலேயே "நீர்" இன்றி அமைந்திருக்காது இவ்வுலகு...!)
இதற்குமேலும், இந்நுண்ணுயிர்களைப் பற்றி நுணுகி ஆராய்ந்தால், நாம் அடுத்த பதிவிற்குச் செல்வதற்குள், மனித இனம் மற்றுமொருமுறை பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கும். ஆகவே, நாம் நேரடியாக அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
நமது பூமியிலேயே இத்தகைய பரிணாமம் நிகழ்ந்திருந்தால், நம் பூமியின் இரட்டைச் சகோதரனும், நமக்கு முன்னரே குளிர ஆரம்பித்தவனுமான, செவ்வாயின் நிலை என்ன?
ஒருவேளை அந்தப் பரிணாமம் அங்கேயும் நிகழ்ந்திருந்தால், அவ்வுயிரினங்கள் தற்போது எங்கே?

புவி தோன்றிய வரலாறு - 2 பிரணவம்...!!!


No automatic alt text available.Image may contain: 1 person, text and closeup
அது TONOSCOPE...! ( 'ஆமா... இவனுக்கு வேற வேலை இல்ல...எதாவது கேட்டா, புரியாத ஒரு வார்த்தைய சொல்லி குழப்பி விட்டுடுறது '-னு நீங்க திட்டுறது எனக்கு கேட்குது..!)
ஆனால், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை 'நிச்சயம் அப்படி ஒன்று இருக்க முடியாது' என வாதிடுவதும், தவறாக முடிவெடுப்பதும் முட்டாள்தனமன்றி வேறில்லை. சரி. "Tonoscope என்றால் என்ன?" என்று முதலில் காண்போம்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஒலி அதிர்வியலின் (Cymatics) தந்தை என்றழைக்கப்படும், Dr.Hans Jenny என்பவர் உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு முறை அல்லது கருவிதான், Tonoscope என்றழைக்கப்படுகிறது. இதை, ஒரு பொருளுக்கும், ஆற்றலுக்குமான தொடர்பை விளக்குவதற்காக அவர் உருவாக்கினார். இதில், ஒரு வட்ட வடிவ, பலூனின் தடிமனையொத்த மெல்லிய சவ்வுபடலம் ஒன்றை ஒரு குழாய் போன்ற அமைப்பில் இணைத்து, அதன் மேல் உப்பு அல்லது மணல் போன்ற துகள்களைப் பரப்பி, அதில் ஒலியைப் பரப்புவதன் மூலம் ஏற்படும் அதிர்வின் மூலம், ஒவ்வொரு ஒலிக்கும் ஒரு வடிவத்தைக் கொடுக்கலாம் என நம்பினார்; சாதித்தும் காட்டினார்.
No automatic alt text available.
இவ்விளைவின்மூலம் 'ஒரு பொருளின் வடிவத்தையும், தன்மையையும் அதைச் சுற்றியுள்ள அதிர்வலைகளே நிர்ணயிக்கின்றன', என்பதை நிரூபித்தார். ( இதற்காகத்தான் 'நல்லவற்றையே நினையுங்கள் ' என முன்னோர்களும், "நீ எதுவாக ஆக நினைக்கிறயோ, அதுவாகவே ஆகிறாய் " என விவேகானந்தரும் கூறினார்களோ என்னவோ..! )
[ மேலும், நமது வேதங்களில் கூறப்பட்டுள்ள சம்ஸ்க்ருத ஸ்லோகங்களுக்கும் இத்தகு ஆற்றல்கள் இருக்கலாம்! ஆகவேதான், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களும் கூட ( மொழி பேதத்தை உருவாக்கி அரசியல் செய்யாமல்! ), கோவில்களில் அர்ச்சனையை சம்ஸ்கிருதத்தில் செய்வதற்கு அனுமதித்தனர் போலும். மேலும் இதுபற்றிய விவாதங்களையும், விவரங்களையும் இனிவரும் தொடர்களில் காண்போம்.]
சரி. 'இதற்கும், வாசகர்களால் என்னிடம் கேட்கப்பட்ட ஆதாரத்திற்கும் என்ன சம்பந்தம்?' என நீங்கள் எண்ணுவது எனக்குப் புரிகிறது.
Dr.Hans Jenny-ன் கூற்றின்படி, " 'ஓம்' என்ற ஒலியானது, ஸ்ரீ சக்கரத்தை உருவாக்கியது"!
எனது கூற்றின்படி, "ஸ்ரீ சக்கரமானது, பெருவெடிப்புக் கோட்பாட்டைக் (Bigbang Theory) குறிக்க வாய்ப்புள்ளது".
No automatic alt text available.
ஸ்கந்த புராணத்தின்படி, "இப்பிரபஞ்சமானது 'ஓம்' என்ற பிரணவ ஒலியுடன் உருவானது". இதைப் பெருவெடிப்புக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டால், எனது கூற்று சரியெனக் கருதும் அளவிற்கு வலுவாகிறது. ஆனால், அதுதான் நிதர்சனமான உண்மை என நான் கூறவில்லை. எமது இப்பக்கத்தின் நோக்கமான, "இப்படியும் இருக்கலாம்" என்ற விளிம்பின் ஓரத்திலேயே பயணிக்க விரும்புகிறேன்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், "Dr.Hans Jenny இருபதாம் நூற்றாண்டில் கண்டறிந்து உலகிற்கு உணர்த்திய உண்மையை, நம் முன்னோர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே எவ்வாறு கண்டறிந்தனர்?" என்பதே..!
இதேபோல, "ஓம்" என்ற மந்திரத்தை ( அல்லது வார்த்தையை), 'பிரணவம்' என்றும் குறிப்பிடுவர். இதன் வார்த்தையை ஒத்த சில சொற்கள் பின்வருமாறு :
பிராணன் - மூச்சு, உயிர்.
பிராணி - உயிரி (அல்லது) உயிரினம்.
பிராணவாயு - மூச்சுக்கற்று, உயிர் வாழத் தேவையான வாயு (Oxygen).
இவை ஏனோ உயிர்களை அல்லது அதன் உருவாக்கத்தைக் குறிப்பதைப் போல தெரிகிறது. இவற்றில் என்னென்ன மர்மங்கள் மறைந்துள்ளனவோ என்றும் எனக்கு இன்னும் விளங்கவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால், நிச்சயம் நம் அறிவுக்கண்ணில் அகப்படும், விரைவில்...!
எனது நண்பர்கள் என்னிடம் முன்வைத்த இன்னொரு வேண்டுகோள் அல்லது உரிமையான கோபம் என்னவென்றால், "கன்னித்தீவு படக்கதை மாதிரி 'டக்'குனு முடிச்சிடுற..!!!" என்பது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், என் எழுத்தின்பால் கொண்டுள்ள அபிமானத்திற்கும் எவ்வாறு கைம்மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஒவ்வொரு புதன்கிழமையும் உங்களை ஆச்சர்யப்படுத்த என்னை ஆயத்தப்படுத்திக்கொள்வேன் என உறுதியாகத் தெரிவித்துகொள்கிறேன்.
உங்களுக்காக, அடுத்தப் பதிவின் ஒரு சிறு Trailer இதோ..!
நான் சென்ற பதிவில் கொடுத்த வாக்கிற்கு ஏற்ப, பிரபஞ்சம் தோன்றிய பின்பு ஏற்பட்ட நிகழ்வுகளை இனி காண்போம்.
பிரபஞ்ச தோற்றத்தின்போது உருவான கோள்களும், நட்சத்திரங்களும், மேகக்கூட்டங்களும் உச்சபட்ச வெப்பநிலையைக் கொண்டிருந்தன. அதன்பின் அவற்றிலிருந்து பிரிந்த சிறு பகுதிகள், ஈர்ப்பு விசையினால் ஆட்கொள்ளப்பட்டு, பின் அது எதிலிருந்து பிரிந்ததோ, அப்பெரும்பகுதியை சுற்றி வரத் தொடங்கின. அவ்வாறு பிரிந்த ஒரு பகுதியான நமது சூரியக்குடும்பம் (Solar System), பால்வெளி அண்டத்தின் (Milkyway Galaxy) மையப் பகுதியையும்; நமது கிரகங்கள், சூரியனையும் சுற்றி வர ஆரம்பித்தன. கால ஓட்டத்தில், வெப்பம் குறைந்து குளிர ஆரம்பித்தது.

புவி தோன்றிய வரலாறு - 1

ஒரு மனிதனுக்குத் தனது பெற்றோரின் பெயர் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு முக்கியமான ஒன்று, நாம் கடந்து வந்த ‘வரலாறு’...!
அதிலும் மிக முக்கியமாக, பன்னெடுங்காலமாக மனிதகுலமே விவாதித்துக்கொண்டிருக்கும் சர்ச்சையான விஷயம், மனித இனம் மட்டுமல்லாது, பிற உயிரினங்களும் இப்புவியில் தோன்றிய வரலாறு.
முதலில் நாம் உயிரினங்களைப் பற்றி பார்ப்பதற்கு முன், இவ்வுயிரினங்களை உள்ளடக்கிய புவி தோன்றிய வரலாறு, அப்புவி சார்ந்திருக்கும் சூரியக்குடும்பத்தின் வரலாறு, சூரியக்குடும்பம் வலம் வரும் பால்வெளி அண்டத்தின் வரலாறு, பால்வெளி மண்டலத்தை உள்ளடக்கிய நம் பிரபஞ்சத்தின் வரலாறு, என நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய, திருப்பிப் பார்க்க வேண்டிய வரலாற்றுப் பக்கங்கள் ஏராளம். அத்தகைய பக்கங்களில் ஒளி பாய்ச்சும் கடமையை, ‘அயலான்’ கையில் எடுத்துள்ளான்.
மூலமுதலான இப்பிரபஞ்சம் தோன்றிய வரலாற்றை முதலில் காண்போம். இதுவரையில் அறிவியலின் பார்வையில் இப்பிரபஞ்சம் மூன்று வழிகளில் தோன்றியிருக்க வாய்ப்புண்டு.

முதலாவது கோட்பாடு : 
No automatic alt text available.
பெருவெடிப்புக் கோட்பாடு. (BIG BANG THEORY)
காலமும் கூட தோன்றாத காலத்தில் அடர்த்தி நிறைந்த ஓர் பொருள் வெடித்ததன் மூலம் ஏற்ப்பட்ட, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் சங்கிலித் தொடர் செயல்முறையின் விளைவாக, அணுக்களும், வாயுக்களும், பின் திடப்பொருட்களும் உருவானதாக சொல்லப்படும் கோட்பாடே, ‘பெருவெடிப்பு’ கோட்பாடாகும். இதன் பின்னரே, சூரியனும், அதைச் சுற்றியுள்ள கோள்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது கோட்பாடு : நிலைப்புக் கோட்பாடு (STEADY-STATE THEORY)
இந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது; இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. இதுவே நிலைப்புக் கோட்பாடு.

மூன்றாவது கோட்பாடு : துடிப்புக் கொள்கை (PULSE THEORY)
இதன்படி, விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம், ஒரு கட்டத்திற்குப் பின் சுருங்கத் தொடங்கும். அது ஒரு எல்லைவரை சுருங்கிய பின் மீண்டும் விரியத் தொடங்கும். இதுவரையில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, பிரபஞ்சம் விரிவடைவதாக அறியப்பட்டதே தவிர, சுருங்குவதற்க்கான ஆதாரங்கள் இன்னும் கிட்டவில்லை. (ஒருவேளை, எதிர்காலத்தில் நிகழ்ந்தாலும் நிகழலாம்!)
No automatic alt text available.
இம்மூன்றில் முதலாவதாகக் கூறப்பட்ட, பெருவெடிப்புக் கொள்கை அதிக சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதால், அதுவே இப்பிரபஞ்ச தோற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரையில் நம்பப்பட்டுவருகிறது.

சரி, உருவான பிரபஞ்சத்தில் உயிர்கள் எப்படி உருவானது?
இது, ஆராய்ச்சியளர்களுக்கு மேலும் பைத்தியம் பிடிக்கக் காரணமான கேள்வி..!
வழக்கம்போலவே, ஒவ்வொரு கருத்துக்களுக்கும் எதிர்க்கருத்துக்கள் கூறும் சாரார், அன்று முதல் இன்று வரை, உலகெங்கிலும் உண்டு.
விஞ்ஞானத்தின் ஒவ்வொரு புதிய பரிணாமத்தையும், அது பரிணமிக்கும்போதே முட்டுக்கட்டையிட்ட பல கூட்டங்கள், விஞ்ஞானிகளை சூனியக்காரர்கள் என்றும், கடவுளுக்கு எதிரானவர்கள் என்றும், பைத்தியக்காரர்கள் என்றும் முத்திரையிட்டு, அவர்களைத் துன்புறுத்தியும், சித்ரவதை செய்தும், கொலை செய்தும்(!) வந்துள்ளதற்கான ஆதாரங்கள், அவ்விஞ்ஞானிகளின் ரத்தத்தில் தோய்க்கப்பட்டு காய்ந்து போன வரலாற்றுப் பக்கங்களாய் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன.
உண்மையில், அனைத்து மதங்களிலும் மறைமுகமாக சொல்லப் பட்டுள்ள அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி விஷயங்களை, ஆராய்ச்சியாளர்கள் வலுப்படுத்தவே முயன்றுள்ளனர். ஆனால், அவ்வறிவியல் உண்மைகள் பொதிந்த விஷயங்களை மதச் சாயம் கொண்டு மறைத்து, மேற்கொண்டு ஆராய விடாமல் செய்தனர்.
நான் இதில் இனி பதிவிடும் பதிவுகள், நான் கடவுள் நம்பிக்கை ‘உள்ளவனா?’, ‘அற்றவனா?’ என்ற சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடும்.
உண்மையில், மேற்கூறிய இரண்டு பிரிவுகளில், ‘ஒன்றில்’ நான் இல்லை. ‘இன்னொன்றில்’ நான் இருக்க விரும்பவில்லை.
இதில் நான் எதை ‘ஒன்று’, எதை ‘இன்னொன்று’ எனக் கூறினேன் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
Image may contain: 1 person, beard

மேலே பிரபஞ்சம் உருவான வரலாற்றை நம் நாட்டின் ‘திருமூலர்’, “நாமெல்லாம் மேகக்கூட்டத்திலிருந்து பிறந்தவர்கள்” என்று பாடியுள்ளார்.
உண்மையில் கோள்கள் உருவாவதற்கு முந்தைய நிலையான, தூசுகள் நிரம்பிய மேகக்கூட்டம் போன்ற(!) நிலைக்கு, “நெபுலா” என்று பெயர்.
எப்படிக்கூறினார் இத்தனை தெளிவாக...?! (அதுவும் TELESCOPE இல்லாத அந்தக் காலத்தில்..! இனி வரும் பதிவுகளில் நான் குறிப்பிடப்போகும், நமது முன்னோர்களின் கண்டுபிடிப்புகளை ஒப்பிடும்போது, 'இது ஒன்றுமே இல்லை' என்றுகூட சொல்லலாம்..! [இங்கு நான் 'முன்னோர்' எனக் குறிப்பிட்டது, ஒட்டுமொத்த மனித இனத்தையே ஆகும்)]
மேலும், “ஓம்” எனும் பிரணவ ஒலியுடன், இப்பிரபஞ்சம் தோன்றியது என ‘ஸ்கந்த புராணம்’ கூறுகிறது.
இந்த “ஓம்” ஒலியை ஒத்த “ஆமென்” வார்த்தை “கிறிஸ்தவத்திலும்”, “ஆமீன்” என்கிற வார்த்தை “இஸ்லாத்திலும்” இருப்பதைக் காணலாம்.
கிறிஸ்தவ மத நம்பிக்கையின்படி, கடவுள் ஆறு நாட்களில் உலகைப் படைத்து, ஏழாம் நாள் ஓய்வேடுத்தாகக் கூறுவர். இந்த ஆறு நாட்களுக்கும் சேர்த்து, இப்பிரபஞ்சத்தின் தோற்றத்தைக் கூறிய நான், இன்றிலிருந்து ஏழாம் நாளில், உயிரினங்களின் தோற்றம் பற்றிக் கூற உள்ளேன்.
உண்மையில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றின?
மனிதனைப் படைத்தது யார்?
இப்பிரபஞ்சத்தில் மனித இனம் மட்டும்தான் அறிவுலக ஆட்சியாளனாக உள்ளதா?

உயிர்...!

உயிர். இன்றளவிலும், யாராலும் இங்குதான் உள்ளது என அறுதியிட்டுக் கூறமுடியாத (கடவுள், பேய், அமானுஷ்யம், அதிசயம், வேற்றுகிரக உயிரினங்கள், இதுபோல இன்னும் பல) விஷயங்களுள் முக்கியமான ஒன்று. சரி. அந்த உயிரைப் பற்றி சிறிது பார்த்துவிட்டு, பின் Jurassic Park-க்கு போகலாம்.\
Image may contain: 1 person, sitting
இன்றைய விஞ்ஞானம் காண இயலா உண்மைகளைக் கண்டவர்கள், நம்மவர்கள். உயிர் எங்கிருக்கிறது எனத்தெரியாது அறிவியலுலகம் விழிக்கும்போது, பல நூறு ஆண்டுகளுக்கு முன் திருமூலர் தனது பாடலில்,
"மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவியது கூறது ஆயிரமானால்
ஆவியின் கூறு நூறாயிரத்தொன்றாமே"
என்று கூறியுள்ளார். இதன் பொருள், ஒரு பசுவின் முடியை, நூறாகக் கூறிட்டு, அதில் ஒன்றை எடுத்து அதையும் ஆயிரமாகக் கூறிட்டு, அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து அதையும் நூறாயிரமாக(லட்சம்)க் கூறிட்டபின் அதிலிருந்து கிடைக்கப்பெறும் ஒரே ஒரு கூறின் அளவே இவ்வுயிரின் அளவு எனக் கூறியுள்ளார். (இத வச்சுக்கிட்டே நாம இவ்ளோ ஆட்டம்...!)
No automatic alt text available.
தற்கால அறிவியல் கண்டறிந்த ஒரு விஷயம், ஒரு மனிதன் இறந்த பின் அவனது எடையிலிருந்து 21 கிராம் குறைகிறதாம். இதுவே உயிரின் எடையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதைக் கண்டறிந்து, உலகிற்கு வெளிக்கொணர்ந்தவர், அமெரிக்க உயிரியலாளர், Dr.டங்கன் மேக்டக்கல் (Dr.Duncan MacDougall) இவரது முழுப்பெயர் Dr.Duncan "Om" MacDougall.
Image may contain: 1 person
 . மற்றபடி, ஆன்மா, சொர்க்கம், நரகம் இவற்றையெல்லாம் அறிவியலுலகம் இன்னும் ஏற்கவில்லை.
நாம் அவ்வாறு கண்டறிந்து கூறிய, இன்றைய நானோ டெக்னாலஜி (Nano Technology)-யின் முன்னோடியான விஷயங்களைப் பற்றி மேலும் அறிய, எனது நண்பர் திரு.செந்தில் குமரனின் வலைத்தளமான "www.vetrupakkam.com"-ஐப் பார்வையிடவும்.
இன்றைய விஞ்ஞானம், ' "உயிர்" இதில் இருக்க வாய்ப்பு அதிகம்' என சுட்டிக்காட்டும் ஒரு விஷயம், DNA (De-oxyribo Nucleic Acid). இவற்றை மேலும் பிரித்தால் கிடைப்பது வெறும் அமினோஅமிலங்கள் (Amino Acids). ஒரு வீட்டில் செங்கல்லின் அடிப்படைப் பணியைப் போன்றது, ஒரு DNA-ல் அமினோஅமிலத்தின் பணி; அதாவது இதுவே DNA உருவாக்கத்தின் மூலம். மொத்தம் 21 அமினோ அமிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
No automatic alt text available.
இத்தகைய அமினோ அமிலங்களின் கூட்டு முயற்சியால் உருவாவது, கொலாஜென் (Collagen). இது ஒரு எளிய வகைப் புரோட்டீன். இதை உருவாக்க, 1055 அமினோ அமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். Statistics விதிகளின்படி, இவ்வாறு ஒரு ஒழுங்கமைவில் உருவாவதற்கான வாய்ப்பு, 1-க்குப் பின் 260 சைபர் போடுங்கள். அத்தனை சாத்தியக்கூறுகளில் ஒன்று...!!! (தலையில் அதிகம் முடி இருப்பவர்கள் இந்தத் தொகைக்கு ஒரு பெயர் வைத்து எனக்குக் கூறவும்...!) இது பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
நமது ரத்தத்தில் உள்ள "ஹீமோகுளோபின்" ஒரு புரோட்டீன். இதை உருவாக்க, 146 அமினோஅமிலங்களை ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்பாடு செய்ய வேண்டும். இதுவே கூட எந்த அளவிற்கு அரிதான சாத்தியக்கூறு என்றால், 'ஒரு காயலான் கடையில் புயல் காற்று அடித்து, தானாக ஒரு "கார்" உருவாவதைப் போல...!'
இத்தகைய DNA-வில்தான், ஒரு மனிதனின் உயிரியல் ஜாதகமே உள்ளது. இவற்றை ஜீன்கள் (Genes) என்பர். இதைப்பற்றிய படிப்பு, "ஜெனடிக்ஸ்" (Genetics) என்றழைக்கப்படுகிறது. இதில்தான் ஒரு மனிதன் அல்லது உயிரினத்தின், நிறம், குணம், நோயின் அறிகுறி, ஆயுள், போன்று ஜோசியக்காரன் கூறும் அனைத்தும் அடக்கம். (ஆனா, இந்த Coding-அ உருவாக்கின Programmer யாருன்னுதான் இன்னும் தெரியல..!)
Image may contain: one or more people and people standing
அவற்றை நான்கே எழுத்துக்களால் மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட ஒரு மிகப்பெரிய நாவலாக இன்றைய அறிவியல் உலகம் காண்கிறது. அவை A, T, C மற்றும் G ஆகும். இதில் A, T-யோடு மட்டும்தான் சேரும். அதேபோல, C, G-யோடு மட்டும்தான் சேரும். (காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் ஈர்ப்பது போல அல்லது ஒரு Zip போல.) இதிலுள்ள A, T, C ,G எவ்வகை அமிலங்களைக் குறிக்கும் என்பதைப் பின்வரும் படங்களில் காண்க.
இத்தகைய DNA-க்கள் ஒரு செல் உயிரினம் பிரிந்து, பல ஒரு செல் உயிரினங்கள் உருவாகக் காரணமாகின்றன. இது "இரட்டிப்பாதல்" (Replication) எனப்படுகிறது.
[ இவற்றைப் பற்றி ஆழமாக ஆராயாமல் அடுத்த பகுதிக்குச் செல்வோம். ]
("இப்போ என்னதான்யா சொல்ல வர்ற...?" அப்டின்னு நீங்க புலம்புறது எனக்கு கேக்குது...!)
காரணம் இருக்கிறது. இந்தத் தற்செயல் எவ்வாறு சாத்தியமானது? 'அதிசயம்தான்' என்று மட்டுமே பதிலளிக்கிறது அறிவியல். காரணம், இத்தகைய அமினோ அமிலங்களை நாம் செயற்கையாக உருவாக்க முனைந்தாலும், உருவாக்க இயலாது. ஏனெனில், அப்போதைய சூழ்நிலையை ஒருவரும் அறியார். அத்தகைய சூழ்நிலையை, மனித மனத்தின் அனுமானம் கொண்டு உருவாக்க இயலாது என்றே தோன்றுகிறது.
சரி, 'இதில் நமது பதிவிற்கு சம்பந்தமான விசித்திரம் ஏதேனும் உண்டா?' என நோக்கும்போது, இவ்வாறு முறுங்கிய நூலேணி போல உள்ள ஒரே ஒரு மனித DNA-வை நீட்டினால், சராசரியாக 6 அடி நீளம் வருமாம். [ ஒரு மனிதனின் சராசரி உயரமாகக் கொள்ள உகந்த அளவு ]. அதே போல, ஒரு மனிதனின் உடலிலுள்ள அனைத்து DNA-க்களையும் இதேபோல நீட்டினால் வரும் நீளம், 15 கோடி கிலோ மீட்டர். [ சூரியனுக்கும், நமது பூமிக்கும் இடையே உள்ள தொலைவு ]. இது ஏதோ திட்டமிட்ட கணக்கீடு போலவே (எனக்குத்) தோன்றுகிறது. அச்சூட்சுமத்தை விரைவில் அறிவோம்

பச்சை நிறத்தில் தோல்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்து நாட்டின் "ஸஃபோல்க்" (Suffolk) என்ற இடத்திற்கு அருகேயுள்ள "வுல்பிட்" (Woolpit) என்ற ஊரின் ஒரு தெருவில் ஒரு சிறுவனும் சிறுமியும் அழுதுகொண்டே சென்றுகொண்டிருந்தனர். (இதென்ன பெரிய உலக அதிசயமா? எனக் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்) அவர்கள் நம்மைப்போன்று இருக்கவில்லை. அவர்களின் தோல் பச்சை நிறத்தில் இருந்தது! மேலும் அவர்கள் அணிந்திருந்த உடை முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. (அக்காலத்தில் உள்ள உடைகளுடன் ஒப்பிடும்போது அப்படி வித்தியாசமாக இருந்திருக்கிறது. இப்போது எப்படியோ தெரியாது.) நம் உலகில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமல்லாது, வேறு சில பொருட்களை உபயோகித்தும் அவ்வுடை உருவாக்கப்பட்டிருந்தது. அக்கம்பக்கம் இருந்தவர்கள், அச்சிறுவர்களை அழைத்து விசாரித்தனர். அவர்களுக்கு நம் மொழியும் புரியவில்லை; நமக்கு அவர்கள் மொழியும் புரியவில்லை. (வெளங்கிடும்!) ஏதோ புதுமொழியில் பேசிக்கொண்டனர். நம்முடைய உணவை அவர்களால் சாப்பிட முடியவில்லை. கடைசியில் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவர்கள் பீன்ஸ் காய்களை மட்டும் சாப்பிட்டனர். (அவங்க கலருக்கு மேட்சா எடுத்து சாப்டிருக்காங்க பாருங்க!) போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் சிறிது நாட்களில் அச்சிறுவன் இறந்து போனான். அச்சிறுமியோ கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உணவுகளையும் சாப்பிடப் பழகிக்கொண்டாள். (Survival of the Fittest - தக்கன பிழைக்கும்!) அவளுடைய தோலின் நிறமும் சற்று இளஞ்சிவப்பாக மாறத் தொடங்கியது. மேலும், கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில மொழியையும் புரிந்துகொள்ளத் தொடங்கினாள். பின், தட்டுத்தடுமாறியேனும் ஆங்கிலத்தில் பேசுமளவிற்குக் கற்றுக்கொண்டாள்.பூமிக்கடியில் இருக்கும் ஒரு புதிய இடத்திலிருந்து இங்கு வந்ததாகத் தெரிவித்தாள். மேலும், அவ்வுலகில் சூரிய ஒளியையே கண்டதில்லை என்றும், அங்கு எல்லாமே பச்சை நிறத்தில்தான் இருக்கும் என்றும் அவள் கூறினாள். பூமிக்கடியிலிருந்த பெரிய குகையின் வழியாக அவள் வந்ததாகவும் தெரிவித்தாள். இத்தகவல்கள், அக்காலகட்டத்தில் வாழ்ந்த "வில்லியம் ஆஃப் நியூபர்க்" (William of Newburgh - 1189) மற்றும் "ரால்ஃப் ஆஃப் கோக்கஷால்" (Ralph of Coggeshall -1220) போன்றவர்கள், நேரில் கண்டதாகப் பதிவிட்டிருக்கும் குறிப்புகளிலிருந்து இத்தகவல்கள் அறியப்படுகின்றன. இச்சிறுவர்களின் ஞாபகமாக இன்றும் அவ்வூரின் வரவேற்புக் கம்பத்தில் இருவரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன; அதுவும் அச்சிறுவர்களின் உருவங்கள் பச்சை நிறத்தில் இருப்பது போன்று!
Image may contain: outdoorImage may contain: one or more people
இதே போல் 1887-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் ஒரு சம்பவம் நடந்தது. "பேன்ஜோஸ்" (Banjos) என்ற இடத்தினருகே இருந்த குகையிலிருந்து பச்சை நிறத்தோலை உடைய சிறுவனும், சிறுமியும் வெளியே வந்தார்கள். இவர்களுக்கும் அவர்களைப் போல் நமது மொழி தெரியவில்லை; உணவை உட்கொள்ள முடியவில்லை; இங்கும் அச்சிறுவன் உணவை உட்கொள்ளாத காரணத்தால் இறந்துவிட்டான்; அச்சிறுமி 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்தாள். ஸ்பானிஷ் மொழி பேசத் தொடங்கினாள். மணல் என்பதே இல்லாத ஒரு இடத்தில் அவள் வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்தாள். ஒரு புயல் காற்று தன்னையும், தனது சகோதரனையும் ஒரு குகைக்குள் தள்ளிவிட்டதாகவும், மிகவும் சிரமப்பட்டு அக்குகையைக் கடந்து இங்கு வந்து சேர்ந்ததாகவும் அவள் குறிப்பிட்டாள்.
உலகில் இது போன்ற சம்பவங்கள் பத்துக்கும் அதிகமாக நடந்துள்ளன. இதில் மேற்கூறிய இரண்டும் மிகப் பிரபலமானவை. இவை இரண்டையும் படிக்கும்போது ஏதோ பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்ற இரு கதைகளை சொல்வது போலத் தோன்றலாம். இதில் இரண்டாவது சம்பவத்தின் நம்பகத்தன்மையும் முன்கதையையொத்த சம்பவங்களின் நிகழ்வுகள் காரணமாக, சற்று சர்ச்சைக்குரியதாக உள்ளது. காரணம் இரண்டிற்கும் அவ்வளவு ஒற்றுமை. ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. அது, முதலில் தோன்றிய சிறுமி, மணமுடித்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்தாள்; ஆனால், இரண்டாவது பெண் 5 ஆண்டுகளில் இறந்து போனாள், என்பதே. (அந்த பொண்ணோட வாரிசு யாராவது இப்பவும் இருந்தா தெரியப்படுத்துங்க!) உலகில் பெருகிவிட்ட மோசடிகளின் தாக்கம் உண்மைகளை நம்மிடமிருந்து பிரித்து வெகு தொலைவு கொண்டுசென்றுவிடுகிறது.
{"வேற்றுக்கிரகவாசிகள்" என்றதும் 'பச்சைநிறத்தோல்' என பெரும்பாலானவர்களுக்கு நினைவிற்கு வரக்காரணம் இவர்கள்தான் என்றால் மிகையாகாது. உதாரணமாக, "டிராகன் பால் ஜீ" (Dragon Ball - Z) ஒளிச்சித்திரக் கதையில் (Cartoon) வரும் "பிக்கலோ" (Piccolo) என்கிற கதாப்பாத்திரம் ஒரு வேற்றுகிரகவாசி. "நாமிக்" (Namek) எனும் கிரகத்தைச் சேர்ந்த பச்சை நிற மனிதன்.}
மேலும், இவர்களின் கதைகள், "E.T. - The Extra Terrestrial" மற்றும் அதைத் தழுவி எடுக்கப்பட்ட "கோய் மில் கயா" (KOI MIL GAYA) போன்ற படங்களை ஞாபகப்படுத்தலாம். ஆனால் அவற்றில், ஒரு வேற்றுகிரகவாசியை, திரும்பிச்செல்லும் அவசரத்தில், அதன் சகாக்கள் தவறவிட்டுவிடுவர் என்பதுபோல் கதை செல்லும்.
மேலும் இப்பதிவில் உங்களுக்கு எழக்கூடிய கேள்விகளுள் ஒன்று, "அப்படியெனில் இப்பதிவுகள் உண்மையா? இல்லையா?" என்பது. காரணம், இதை மறுப்பவர்களும் உண்டு. (அதற்கான இணைப்பையும், கீழே இணைத்துள்ளேன்.) இதைப்பற்றி என்னிடம் கேட்டால், வேற்றுகிரகவாசிகளின் இருப்பை நம்புபவர்கள் இவை உண்மையென நம்பலாம். மற்றவர்கள் இது கதை என எடுத்துக்கொள்ளலாம். காரணம் அவர்கள் இல்லை என்பதன் நமது மறுப்பு, அவர்களின் இருப்பைத் தடுக்கப்போவதும் இல்லை. அவர்கள் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கை (மட்டும்), அப்படி ஒரு ஜீவராசிகளை விண்வெளியில் உற்பத்தி செய்யப் போவதுமில்லை. (யச்சச்ச யச்சச்ச, கச்சச்ச கச்சச்சா..!)
இதை நம்புபவர்களுக்கும் எழக்கூடிய மற்றுமொரு கேள்வி, "அதெப்படி இரு வெவ்வேறு சம்பவங்களும் ஒரே போல் இருக்க முடியும்?"
அது தான் அமானுஷ்யம்.

கனவுகள்

அன்பார்ந்த தோழர்களே கனவு சொல்லும் சேதியைப் பற்றி நேற்று பார்த்தோம். சரி இதெல்லாம் விஞ்ஞானக் காலமாகிய இன்றைய நாட்களில் மரபணு கோளாறுகளால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சில மறுப்பாளர்கள் பேசலாம்.
ஆனால் இது ஆயிர வருடங்களுக்கும் முன் அப்பாற்பட்டும் காணப்பட்டு வருகின்ற ஆராய்ச்சி மற்றும் உண்மை 
Image may contain: 1 person, smoking
இவை, இன்று நேற்று தொடங்கிய ஆராய்ச்சியல்ல. இத்தகைய கனவுகள் தொடர்பான சம்பவங்களுக்கு ஆதாரமாக, 4000 ஆண்டுகள் பழமையான காகிதம் போன்ற (Papyrus) சுவடி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 'கனவுகளும் அதன் அர்த்தங்களும்' விரிவாக எழுதப்பட்டிருந்தன. அக்காலத்தில், எகிப்தில் 'தெய்வீகக் கனவு'களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். (அதென்ன தெய்வீகக் கனவு?) கலாச்சார வளர்ச்சியடைந்த பண்டைய நாடுகளான எகிப்து, சீனா, கிரீஸ், இந்தியா - இந்த நாடுகளில், நோயாளிகள் கோவில்களுக்கு வந்து, நோய் குணமடையும் வரை தங்கும் ஒரு வழக்கம் இருந்தது. இரவில், ஆலயத்தின் பிரகாரத்திலேயே தூங்க வேண்டும். நோயாளியின் கனவில் கடவுள் வந்து பரிகாரம் சொல்வாராம்(!). கிரேக்க நாட்டில், "ஈஸ்க்யூலேப்பியஸ்" ( Asklepios / Asclepius / Aesculapius) ஆலயத்தில், 'மென்ட்டேஷன் (Mentation) சிகிச்சை' என்ற ஒன்று பின்பற்றப்பட்டது. ('மென்ட்டேஷன்' என்றால் "கோவில் தூக்கம்" என்று அர்த்தம்.) நோயாளிகள், கோவிலுக்கு வந்து, (விலங்குகளைப்) பலிகொடுத்துப் பிரார்த்தனை செய்துவிட்டு (ஆசாரமாக), இரவில் பிரகாரத்தில் படுத்துத் தூங்க வேண்டும். ஈஸ்க்யூலேப்பியஸ் கடவுள் அந்நோயாளியின் கனவில் வந்து சிகிச்சையளிப்பார் என்றும், சிலருக்கு தூங்கும்போது அறுவைசிகிச்சைகள் கூட நடந்துள்ளது என்றும் கூறப்பட்டது(!). (பூசாரிகளில் தேர்ந்த பல மருத்துவர்கள் இருந்ததாகவும், அவர்கள் கடவுளின் பெயரால் இத்தகைய சிகிச்சைகளையும், தூங்கும் நபரின் காதில் மருந்துகளை முணுமுணுத்தல் போன்ற [கனவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த] செயல்களைச் செய்திருக்கலாம் என மனோதத்துவ நிபுணர்களும், நோயாளி பக்தர்களின் தீவிர நம்பிக்கையே அவர்களைப் பாதி குணமாக்கியிருக்கும் என உளவியல் ஆய்வாளர்களும் தற்போது கருத்து தெரிவித்துள்ளனர். இது போன்ற தலையீடுகள் ஏதுமின்றி தோன்றிய சில கனவு நிகழ்ச்சிகள், வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன. அவற்றில் அலெக்ஸாண்டரின் கனவும் ஒன்று. உலகையே ஆள வேண்டும் என கனவு கண்ட இளம் பேரரசன் அலெக்சாண்டர் (Alexander The Great), அதன் ஒரு பகுதியாக பொனீஷிய நாட்டின் "டைர்" (Tyr) நகரத்தின் மீது போர் தொடுத்தார். டைர் வீரர்கள் அலெக்ஸாண்டரின் படையை கடுமையாக எதிர்த்தார்கள். அலெக்ஸாண்டரின் படை சற்று நம்பிக்கை இழந்தது. அன்றைய இரவில், அலெக்ஸாண்டரின் கனவில் "Satyr" (பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்ட ஒரு குட்டிச்சாத்தான் போன்ற கிரேக்கப் புராணக் கற்பனைக் கதாப்பாத்திரம் ['Narnia' திரைப்படத்தில் கூட இக்கதாப்பாத்திரம் வரும்]) ஒன்று தங்கக் கேடயத்தின் மீது நடனமாடுவது போல அக்கனவு விரிந்தது. இதன் அர்த்தம் புரியாத அலெக்சாண்டர் கவலை கொண்டார். "கனவுகளை விளக்குபவர்" எனப் பெயர்பெற்ற அரிஸ்டாந்தர் (Aristander)-ஐ வரவழைத்து கனவைச் சொல்ல, அவர். 'கவலை வேண்டாம் அரசே! இது நல்ல கனவுதான். கடவுளின் சொல் விளையாட்டு. Satyros என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். Sa + Tyros. அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம். "'டைர்' நகரம் உன்னுடையது; எடுத்துக்கொள்" என்பதே கனவின் அர்த்தம்!' என்றார். அதன்பின் கிடைத்த உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் போரிட்டு டைரை கைப்பற்றினார் அலெக்சாண்டர். எனவே கனவுகள் மறைமுகமாகவும் ஒரு பொருளை உணர்த்தும் எனக் கூறலாம். (அலெக்சாண்டர் கனவு கண்டதால் போரில் ஜெயித்தாரா? அல்லது கனவின் மூலம் பெறப்பட்ட ஊக்கத்தினால் போரில் வென்றாரா? என்பது வழக்கம்போல சர்ச்சைக்குரிய வாதமாகவே தொடர்கிறது.)
No automatic alt text available.
இது நல்ல கனவு, எனவே ஊக்கம் கிடைத்தது என வைத்துக் கொள்வோம். தூக்கத்தைக் கெடுக்கும் பயங்கரக் கனவுகளும் (Nightmares) இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஒரு வரலாற்று உதாரணம், இன்னொரு மன்னரின் வாழ்விலுள்ளது. அவர், "ஜூலியஸ் சீசர்" (Julius Caesar). ஜூலியஸ் சீசர் சதிகாரர்களால் கொல்லப்படுவதற்கு முன்னிரவில், அவரது (மூன்றாவது) மனைவி "கல்பூர்னியா" (Calpurnia), சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு, அவற்றிலிருந்து நீரூற்று போல ரத்தம் தெறிப்பதாகக் கனவு கண்டாள். சீசரிடம் இதுபற்றிக் கூறி செனட் கூட்டத்திற்குச் செல்லவேண்டாமென மன்றாடினாள். அலட்சியப் புன்னகையோடு வெளியேறிய சீசரின் இறுதிகால நிகழ்வுகளை, வரலாறே நமக்குப் பறை சாற்றுகிறது. 'காரணம் இதுதான். நமக்கு வரும் கனவுகளையோ, அது மறைமுக உணர்த்தும் விஷயங்களையோ நாம் நம்பாமல் அலட்சியப்படுத்துகிறோம், அல்லது அவற்றை பொருட்படுத்துவதில்லை. இதனால் பல நன்மைகளை நாம் இழக்கிறோம்' என, கனவுகள் பலிக்கும் என நம்பும் சாரார் கருதுகின்றனர்.
சரி. இவ்வாறான கனவுகளை முறையாகப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமாக ஏதேனும் சாதித்த மனிதர்கள் யாரேனும் உண்டா எனத் தேடினால், நிச்சயம் இருக்கிறார்கள் என்றே வரலாறு பதிலளிக்கிறது! அவர்களுள் மிக முக்கிய உதாரணம், "சர். ஐசக் நியூட்டன்" (Sir. Isaac Newton).
தனது மனதில் எழும் பல குழப்பமான கேள்விகளுக்கு, கனவில் தான் நியூட்டனுக்கு விடை கிடைக்குமாம். அவற்றை அரைத்தூக்கத்தில் குறிப்பெடுத்துக்கொள்வாராம். அவ்வாறு கனவின் மூலம் பெறப்பட்ட விடைகளும், மிகச்சரியாக இருப்பதுதான் ஆச்சர்யத்தின் உச்சம்!
சரி. இவர் அக்கேள்வி பற்றிய சிந்தனையோடு உறங்கச் சென்றிருப்பார், அதனால் அவரது ஆழ்மனம் விழித்திருந்து விடை கண்டுபிடித்திருக்குமா? எனப் பார்த்தால், அவ்வாறும் இல்லை. காரணம், ஒருமுறை இவ்வாறாக நடந்திருந்தால் ஒருமனதாக இக்கருத்தை நம்பியிருக்கலாம். ஆனால், நியூட்டனுக்குப் பலமுறை இவ்வாறு நடந்துள்ளது.
இவராவது கேள்விக்கான பதிலை கனவில் கண்டார். நமது மண்ணின் மைந்தர் ஒருவர், கேள்வி-பதில் இரண்டையுமே கனவில் தான் கண்டாராம்! அவர், "ஸ்ரீனிவாச இராமானுஜன்" (Srinivasa Ramanujan). இராமானுஜன் எப்போதும் தனது தலையருகில் ஒரு நோட்டுப் புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருப்பாராம். அதில், தன் கனவில் வரும் சமன்பாடுகளையும், சில புதிரான கணித விவரங்களையும், தேற்றங்களையும், சிக்கலான கணிதங்களையும், அவற்றின் தீர்வுகளையும் அரைத்தூக்கத்தில் கிறுக்கி வைப்பாராம். மறுநாள் விழிக்கும்வரை அது நினைவில் இருக்குமோ, இருக்காதோ என்கிற நியாயமான சந்தேகம்தான் இதற்குக் காரணம். இவரது நோட்டுப்புத்தகங்களில் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தேற்றங்கள், இன்னும் மேலைநாட்டு கணித அறிஞர்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. காரணம், இவர் தனது குறிப்பேடுகளில் தேற்றம் - அதன் விடை, ஆகிய இரண்டை மட்டுமே பெரும்பாலும் குறித்துவைத்துள்ளார் (யாரோ கூறி இவர் எழுதியது போல!). (நாம ஸ்கூல் படிக்கும்போது படிச்ச Maths Solution Book மாதிரி) ஆனால், அவற்றுக்கு பல வழிகளில் முயன்று விடை கண்டறிந்தால், அட்சரசுத்தமாக அவர் எழுதிய விடைதான் வருகிறது. பக்கங்கள் பல தாண்டி கண்டறியப்படும் கணித விடையை, கேள்வியின் பக்கத்திலேயே பதிலாக அவரால் எவ்வாறு எழுத முடிந்தது?! இத்தனைக்கும் மேல், அவர் காலத்திற்குப் பின் உருவாகிய சில தேற்றங்களும், அவரது தேற்றத்தை நிரூபிக்கப் பயன்பட்டவயே! உண்மையில் இராமானுஜன் விந்தையான மனிதர்! (நமக்கு கணக்குதான் புரியமாட்டேங்குதுனா, கணக்குல சாதிச்ச ஆளும் அதுக்கு மேல இருக்காரு!)
மேலும், இராமானுஜனின் காலத்தில் கடல் தாண்டிச் செல்வதென்பது, (அவரது குடும்ப வழக்கப்படி) தீட்டாகக் கருதப்பட்டது. (எவன் இப்டிலாம் கிளப்பி விட்டான்-னு தெரியல!) இதன் காரணமாக, இங்கிலாந்து செல்ல இராமானுஜன் தயங்கினார்; அவரது குடும்பத்தினரும் அவ்வாறே தடுத்தனர். அச்சமயம் 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்' (Madras Board Trust)-ன் தலைமைக் கணக்கராக இருந்த நாராயண ஐயர்-ன் கீழ்தான், இராமானுஜன் பணிபுரிந்து கொண்டிருந்தார். அந்த நாராயண ஐயரின் உறுதி, இராமானுஜனையும், அவரது குடும்பத்தாரையும் குலதெய்வத்திடம் உத்தரவு கேட்க ஒருமனதாக சம்மதிக்க வைத்தது. அவர்களது குலதெய்வம், நாமக்கல்லில் உள்ள நரசிம்மப் பெருமாளும், நாமகிரித் தாயாரும்.
நாராயண ஐயரும், இராமானுஜனும் 3 நாட்கள் கோவிலில் தங்கியிருந்தனர். திடீரென ஒருநாள் நடு இரவில் கண்விழித்த இராமானுஜன், "உத்தரவு கிடைத்துவிட்டது" என்றார். உண்மையிலேயே கடவுள் கனவில் வந்து சொன்னாரா? அல்லது அவர் மனம் அவ்வாறு தன்னை திருப்திப்படுத்திக் கொண்டதா? தெரியவில்லை. மேலும், 'எப்படி இத்தகைய சிக்கலான கணக்குகளுக்கு உங்களால் விடையை மட்டும், அதுவும் மிகச்சரியாகக் குறிப்பிட முடிகிறது?' என்று நண்பர் ஒருவர் இராமானுஜனிடம் கேட்டதற்கு, "என் கனவில் நாமகிரித் தாயார் தோன்றி, அத்தகைய கணக்குகளையும், அதற்கான விடைகளையும் கூறுவார், நான் குறித்துக் கொள்வேன்" எனத் தெரிவித்திருக்கிறார்! (ஹும்.நமக்கு ஒரு சாமியும் கனவுல வந்து பாடம் நடத்த மாட்டேங்குது!)
இத்தகைய புதிருக்கான விடைக்கு, நமது பதிவில் எங்கேனும் தொடர்பிருப்பது போல் தோன்றுகிறதா எனத் தேடினால், இருக்கிறது என்பதே எனது பதில். ஆம். ஒரு பதிவில், 'கணிதம் மனிதர்கள் தோன்றும் முன்னரே இருந்திருக்கும்' என்ற அறிஞர்கள் கருத்தைப் பதிவிட்டிருந்தேன். ஒருவேளை அது உண்மையாக இருந்தால், அவ்வாறு இருக்கும் கணிதம் மனித மனதை ஒரு நிலையில் அடைகிறது எனக் கொள்ளலாம். அது தற்செயலாகவோ, அல்லது கடவுள் மூலமோ அல்லது இறந்த முன்னோரது ஆன்மா / ஆவி மூலமோ அல்லது வேற்றுகிரகவாசி போன்ற நம்மைவிட மேம்பட்ட உயிரினம் மூலமாகவோ (அவரவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப மாறுபட்டு) இருக்கலாம்.
இவ்வாறு தூங்கும்போது வரும் கனவுணர்த்திகள், நாம் கண் மூடினாலே வந்தால் எப்படி இருக்கும்? அவ்வாறு இருக்க வாய்ப்புண்டா? அவ்வாறு நடந்திருக்கிறதா? உங்களுக்கு வரும் கனவு உங்களைப் பற்றி மட்டும்தான் இருக்குமா? உங்களைச் சார்ந்தவர்களையோ, முற்றிலும் அறிமுகமில்லாதவர்களையோ பற்றி இருக்காதா? இல்லை அவ்வாறு நிகழ்ந்திருக்கிறதா? இன்னும் பல புரியாத பல கேள்விகளோடும் குழப்பங்களோடும் உலகம் அமானுஷ்யமாகவே சுழன்று கொண்டிருக்கிறது.
துணைநின்ற நூல்கள்:
கடவுள் - சுஜாதா.
மனிதனும் மர்மங்களும் - மதன்.
கணிதமேதை இராமானுஜன் - பத்ரி சேஷாத்ரி.

வினோத மழைப் பொழிவுகள்

பொதுவாக வானிலிருந்து நீர் மழையாய்ப் பொழியும். அரிதாக ஆலங்கட்டி மழை (நமது பகுதிகளில்) பொழியும். மிஞ்சிப்போனால் விண்கற்கள் அல்லது எரிகற்கள் போன்றவை விழும். அவ்வளவுதான் இயல்பாக விண்ணிலிருந்து விழும் பொருட்கள்; நாமறிந்த வரையில். சரி வானிலிருந்து வேறு ஏதாவது மழைபோல் பொழிந்தால்? "கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்" என்பார்கள். அவ்வாறு கொடுக்கும் தெய்வம் காசு மழை பொழியச் செய்தால்?! "என்ன? கதை விடுறியா? என்பதுபோல் நீங்கள் என்னை நோக்கலாம். ஆனால் அத்தகைய வினோத மழைகளும் இப்பூவுலகில் பொழிந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இந்த வாரம் நனைவோம், வாருங்கள்.
No automatic alt text available.
இத்தகு விண் ஆச்சரியங்கள் தற்காலத்தில் நமது பூமிக்குப் புதிதாகத் தோன்றினாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க அறிஞர் "அதானாசியஸ்", ஏதென்ஸ் நகரில் மீன் மழை கொட்டியது பற்றிக் குறிப்புகள் எழுதி வைத்திருந்தார். பைபிளில் கூட வெட்டுக்கிளி மழை பற்றியும், பாலைவனத்தில் யூதர்கள் பிரார்த்தனை செய்தவுடன், வானிலிருந்து உணவுப் பொருட்கள் விழுந்தன (Manna from Heaven) போன்ற பதிவுகளும் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கின்றன. (இது குறித்த சில திருப்பமான தகவல்களை வரும் பதிவுகளில் காண்போம்)
தற்காலத்தில், சுமார் எண்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வாழ்ந்த "சார்லஸ் ஃபோர்ட்" என்கிற பத்திரிகையாளர், உலகிலுள்ள, அவ்வளவாக விஞ்ஞானிகள் கண்டுகொள்ளாத ஆச்சரியங்களைக் குறித்து சேகரிக்க ஆரம்பித்தார்.1916-லிருந்து 1932 வரை பல இடங்களுக்குப் பயணித்து, தகவல்கள் சேகரித்தார்.லண்டன், நியூயார்க் போன்ற முக்கிய இடங்களிலுள்ள லைப்ரரிகளிலுள்ள நாளிதழ்களை கவனமாகப் படித்து விஷயங்கள் பல திரட்டினார். அவ்வாறு அவர் திரட்டிய விஷயங்களுள் (ஏறத்தாழ 4 பகுதிகளைக் கொண்ட என்சைக்ளோபீடியாக்கள்) அதிகளவு தகவல்கள், வானத்திலிருந்து விழும் பொருட்கள் பற்றியது. சரி. அப்படி எந்த மாதிரி மழை தான் பொழிந்திருக்கிறது என்று பார்த்தால், பட்டியல் நீள்கிறது. அவை,
தவளை மழை,
மீன் மழை,
சிவப்பு மழை,
சிலந்திவலை மழை,
சில்லறை மழை,
குருவி மழை,
வாத்து மழை,
காய்கறி மழை,
பனிப்பாறை மழை,.....
இது, இதுவரை பெய்த இத்தகைய வினோத மழைப் பொழிவுகளில், எனக்குக் கிடைத்த மிகக்குறைந்த வகைகள் பற்றிய பட்டியல் மட்டுமே. இனி, இதில் சிலவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
மீன் மழை:
22.2.1994-ல் ஆஸ்திரேலியாவின் வடக்குப்பகுதியிலுள்ள டன்மாரா என்கிற சிற்றூரில், ஆயிரக்கணக்கான மீன்கள் மழையாகப் பொழிந்தன. அவற்றில் முக்கால்வாசி மீன்கள் வாலை ஆட்டியவாறு உயிரோடிருந்தன. அப்பகுதி மக்கள் செய்தியறிந்து வந்து மீன்களை அள்ளிக்கொண்டு சென்றனர், சமைப்பதற்கு! அதே இடத்தில் ஒரு வாரம் கழித்து மீண்டும் மீன் மழை. சென்ற வாரம் 3 அங்குல மீன்கள். இந்த வாரம் 6 அங்குல மீன்கள். (என்ன ஒரு முன்னேற்றம்..?!)
பனிப்பாறை மழை:
ஆலங்கட்டி மழை (Hail Storm) பார்த்திருப்போம். மக்கள் மீது கல் எறிவது போல் பனிக்கட்டிகள் விழுந்தால்? அவ்வாறு பாறை போன்ற பனிக்கட்டிகள் பெய்யத்தான் செய்திருக்கின்றன. 1800-ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை (ஒரு யானை அளவு!), கர்நாடகாவிலுள்ள ஸ்ரீரெங்கப்பட்டினத்தில் விழுந்தது. இதை சார்லஸ் ஃபோர்டும், நேரில் வந்து பேட்டி எடுத்தும், விசாரித்தும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
No automatic alt text available.
(ஆலங்கட்டி மழை)
(சிறிய பனிப்பாறை மழை)
காய்கறி மழை:
1971-ல் பிரேசில் நாட்டின் 'ஜோவோ பெஸ்ஸோ' எனும் ஊரில் நான்கு லாரிகள் கொள்ளுமளவிற்கு அவரைக்காய்கள் மழையாகப் பொழிந்தன. (நம்ம நாட்டுல காய்கறி விளையுறதுக்குக் கூட மழையைக் காணோம்...!)
சில்லறை மழை:
பிரிட்டனில் மான்செஸ்டர் அருகேயுள்ள செயின்ட் எலிசபெத் தேவாலயத்தின் அருகே 28.5.1981-ல் சில்லறை மழை (Pennies) பொழிந்தது. பாதிரியார் கிரகாம் மார்ஷலுக்குக் கிடைத்த தொகை மட்டும் ஏறத்தாழ 2 பவுண்ட் மதிப்புள்ள நாணயங்கள்! (நம்ம ஊர்லலாம் இப்படி பெய்யமாட்டேங்குதே..!)
சிலந்திவலை மழை:
பிரான்சிலுள்ள 'ஓலோரோன்' என்கிற ஊரில் 17.10.1952-ல், பலமீட்டர் நீளத்திற்கு வெள்ளியைப்போல் மின்னும் மெல்லிய நூல்கள், மெதுவாக கீழே விழுந்து சில நொடிகளில் மறைந்தன. ஒருவேளை வேற்றுகிரகவாசிகளின் வாகனக் கழிவோ? (நம் ஊர் வாகனப்புகை போல), என பலர் விழிபிதுங்கி நிற்கையில், ஒருவகை சிலந்தியின் (பலூன் சிலந்தி) வலைதான் அவ்வாறு மழையாகப் பொழிந்தது என விளக்கப்பட்டது.
அதெப்படி சிலந்திவலை மழையாகக் கொட்டும். இது மட்டுமல்ல, இதற்கு முன் கூறப்பட்ட வினோத மழைகளுக்கும் காரணங்களாகக் கூறப்பட்ட சில விளக்கங்கள் என்னவெனில்,
விமானங்களிலிருந்து விழுந்திருக்கலாம்,
புயல் காற்றினால் சேகரிக்கப்பட்டு மழையாகப் பொழிந்திருக்கலாம்,
வேற்றுக்கிரகவாசிகளின் செயலாக இருக்கலாம்.
இதில் முதல் இரண்டு கருத்துகள், 'இயற்கை சக்தி' (Natural); கடைசி கருத்து 'இயற்கையையும் மீறிய சக்தி' (Super Natural)
மேற்கூறிய முதல் காரணம் (விமானங்கள்) நம்பப்படக் காரணம், 1995-ல் பிரிட்டனின் எடின்பரோ நகரில் "பிரவுன்" வண்ணத்தில் மழை பொழிந்தது. சோதனையில் அது மனிதக் கழிவு (!) எனத்தெரிந்தது. (குருநாதா...என்ன குருநாதா உங்களுக்கு வித்தியாசமான ஐட்டமா எறிஞ்சிருக்காங்க...!!!)
இதேபோல், கனடாவில் பொழிந்த நீலவண்ண பனிக்கட்டியை சோதனை செய்தபோது, அது கழிவறைகளில் சுத்தப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ஒருவகை கிருமி நாசினியுடன் கூடிய மனித சிறுநீர் எனத் தெரியவந்தது. (இதப்படிக்கிற உங்களுக்கே இவ்ளோ கோபம் வருதே. அதை சோதனை பண்ணினவன் நிலைமைய கொஞ்சம் நெனச்சுப்பாருங்க!)
ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நேரத்தில் விமானங்கள் ஏதும் பறக்கவில்லை என ஆய்வறிக்கைகள் கைவிரித்தன. ஒருமுறை இதுபோன்ற ஒரு மழை (!) பொழிந்தபோது ஒரு விமானம் பறந்தது. அது இறங்கியதும் சோதனையிட்டனர். ஆனால் அதன் கழிவறையில் எவ்வித கோளாறும் இல்லை. (அப்போ எவன் பாத்த வேலை டா இது..??!!)
அடுத்ததாக புயல் காற்று நீர்நிலைகளைக் கடந்து வரும்போது மீன், தவளை போன்ற உயிரினங்களை மழையாகப் பொழியச்செய்கிறதோ, என்கிற நோக்கில் ஆய்வு செய்யப்பட்டது. காரணம், புயல், சமயங்களில் ஆடு மாடுகளைக் கூட அலேக்காகத் தூக்கும் வல்லமையுடையது. (ஆனால், மீன், தவளை போன்றவற்றை மட்டும் எப்படி தனித்தனியாக சேகரித்து மழை போல பொழிய வைக்க முடியும்?!
இந்தக்கருத்தையும் முறியடிக்க ஒரு சம்பவம் நடந்தது. 1986-ல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கே 1000 மைல்களுக்கு அப்பால் கைரிபட்டி (காரியாபட்டி இல்ல) எனும் தீவுகளுக்கு மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் வழிதெரியாமல் நடுக்கடலில் 4 மாதங்கள் சிக்கிக்கொண்டனர். அரசாங்கமும் அவர்களைத் தேடும் படலத்தைக் கைவிட்டது. அங்கு சுறாமீன்கள் மட்டுமே உலவும் எப்படியோ போராடி, சுறா மீன்களை வேட்டையாடி, அத்தனை நாட்கள் பச்சையாக உண்டு உயிர் பிழைத்தனர். ஒரு நாள் மூவரும் மண்டியிட்டு, "கடவுளே, சுறா மீன் எங்களுக்கு அலுத்துப் போய் விட்டது. வேறு எதாவது சாப்பிடத் தரமாட்டாயா?" என அச்சூழலிலும் தமாஷாக வேண்டினர். ஒருமணிநேரம் கழித்து சடசடவென மீன் மழை பொழிந்தது. அவையனைத்தும் தேர்ந்த மீனவர்களால் கூட பிடிக்க இயலாத கருப்பு நிறமுடைய, கடலுக்கடியில் 800 அடி ஆழத்திற்குக் கீழ் வசிக்கக்கூடியவை. இது நடந்த இரு தினங்களுக்குள் அவர்கள் அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டனர். அப்போது இவர்கள் கையோடு கொண்டு சென்ற மீன்களைப் பார்த்து அக்கப்பலிலிருந்த அனைவரும் அதிசயித்தனர். ஒரு புயல் கடலின் 800 அடி ஆழத்தில் வாழும் மீனை உறிஞ்சி எடுத்து, தேக்கி பின் மழையாகப் பொழிய வைக்க முடியுமா? (அதுவும் அவர்கள் பிரார்த்தித்த அதே நேரத்தில்!) இது, 'புயல்' கருத்தை வலுவிழக்கச் செய்தது. ('பிரார்த்தனைகள் பலிக்குமா?' என்பது பற்றியும் வரும் பதிவுகளில் காண்போம்)
Image may contain: ocean, sky, water, outdoor and nature
அத்தோடு, முன்னர் கண்ட சிலந்திவலை மழை போல், 28.10.1988-ல் இங்கிலாந்தின் ஆங்கிலக் கால்வாயை ஒட்டிய ஓர் ஊரில் முப்பது சதுர மைல் அளவிற்கு, ஐம்பதடி உயரத்தில் சிலந்திவலை நூல்கண்டாலான பிரம்மாண்ட மேகம் மிதந்துகொண்டிருந்தது. "அந்த அளவிற்கு சிலந்தி வலைகள் பிய்ந்து, பின்று ஒன்றுபட்டு, ஒரு மாபெரும் உருண்டையாக மாறி எப்படி மிதக்கமுடியும்?" என இன்றுவரை விஞ்ஞானிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றனர். "ஒருவேளை அமேசான் போன்ற அடர்ந்த காடுகளிலுள்ள லட்சக்கணக்கான சிலந்திவலைகளின் தொகுப்பாக இருக்குமோ?" என கேட்கத் தோன்றினாலும், "எவ்வாறு அந்த சிலந்திவலைகள் மட்டும் சேகரிக்கப்பட்டன?", "அவ்வாறு திரட்டப்பட்ட உருண்டையிலிருந்து எவ்வாறு ஒவ்வொரு நூலாகப் பிரிந்து மழையாகப் பொழியும்?" போன்ற எதிர்க்கேள்விகள் ஆராய்ச்சியாளர்களை இன்னும் குழப்புகின்றன.
அப்படியெனில் இது வேற்றுகிரகவாசிகளின் செயலா? என நோக்கும்போது, கிடைத்தது ஒரு விஷயம்.
சிவப்பு மழை:
சமீபத்திய ஆண்டுகளில் கேரளா, இலங்கை போன்ற நாடுகளில் பெய்த சிவப்பு நிற மழை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவற்றின் சிவப்பு நிறத்திற்குக் காரணம், ஒரு சில பாக்டீரியாக்கள் என காரணங்கள் விளக்கப்பட்டாலும், ஒரு சில தகவல்கள் சற்று உதறலைக் கொடுத்தது. ஆம். அதில் ரத்த சிவப்பணுக்கள் காணப்பட்டன. இதில் இன்னுமோர் அதிர்ச்சிகரமான செய்தி என்னவெனில், அந்த சிவப்பணு, தற்போது பூமியில் கண்டறியப்பட்டுள்ள எந்தவொரு உயிரினத்தின் ரத்த மாதிரியுடனும் ஒத்துப்போகவில்லை என்பதே நம் உலகில் அமானுஷ்யமாவே உள்ளது.